Header Image

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஏற்பாட்டுக் குழுத் தலைவர் உரை

elanjelianஇவ்வாண்டோடு மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்பிக்கத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவாகிறது. நம் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து வந்திருந்தாலும், தமிழைத் தற்காக்க அவர்கள் தவறவில்லை. இது ஒரு அரிய, கொண்டாடத் தக்க ஒரு வெற்றி. தவிர்த்து, 200 ஆண்டுகளாக மலேசியாவில் காக்கப்பட்ட தமிழைத் தொடர்ந்து காக்கும் கடப்பாடும் நமக்கிருக்கிறது. இது சிக்கல் மிகுந்த ஒரு சவால் என்பது தெளிவு.

இந்த நிறைவு ஆண்டை ஒட்டி, மலேசியக் கல்வியமைச்சு, அதன் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப. கமலநாதனின் தலைமையில், ஓராண்டிற்குத் தொடர்ந்தாற்போல் பல நிகழ்ச்சிகளையும் முன்னெடுப்புகளையும் செயற்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு. நாம் கடந்து வந்த பாதையை எண்ணி மகிழும் அதே தருணத்தில், தமிழ்க்கல்வியின் எதிர்காலம் — குறிப்பாக இன்றைய உலகமயமாக்கப்பட்ட, போட்டி நிறைந்த சமூகப் பொருளியல் சூழலில் — எவ்வாறு இருக்கும், இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆய்துணர்வதற்கு இம்மாநாடு உதவுமெனக் கருதுகிறோம்.

அதன் கரணியத்துக்காகத்தான், ’21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி’ என்ற கருப்பொருளில் மாநாட்டை நடத்துகிறோம். மாநாட்டில் வெளிநாட்டு ஆசிரியர்களும் அறிஞர் பெருமக்களும் கலந்துகொள்வதால், நம் முன் நிற்கும் சவாலைப் பற்றியக் கூடுதலான புரிதல் உங்களுக்குக் கிடைக்குமென்றும், புலம் பெயர்ந்த சூழலில் நம் ஆசிரியர்களின் சிந்தனையும் செயலும் எவ்வாறு இருக்கிறதென வெளிநாட்டவர்கள் அறிந்துகொள்வரென்றும் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

வே. இளஞ்செழியன்