Header Image

தளத்தைப் பற்றி

அனைவருக்கும் வணக்கம்!
வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 21.10.1816இல் பினாங்கில் திறக்கப்பட்ட பொதுப்பள்ளியில் (Penang Free School) செயல்படத் தொடங்கிய தமிழ் வகுப்பில் முதன்முதலாகத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது என்பது வரலாறு. இன்று 524 தமிழ்ப்பள்ளிகளையும் சேர்த்து இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர் கல்விக் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் எனத் தமிழ்க்கல்வி பயிலப்படும் நிலைமை உருவாகி இருக்கின்றது.

கடந்த 200 ஆண்டுகளில் மலேசியாவில் தமிழ்க்கல்வி வாழ்ந்து வருவதையும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதையும் முன்னிட்டு மலேசியக் கல்வி அமைச்சு மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டம் எனும் பெருவிழாவினை முன்னெடுத்துள்ளது.

இதன் தொடர்பில், பல திட்டங்கள், போட்டிகள், கருத்தரங்கம், மாநாடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. அந்த வரிசையில், மலேசியத் தமிழ்க்கல்வி தொடர்பான தகவல்கள், தரவுகள், செய்திகள், படங்கள், காணொலிகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஓர் இணையத் தளம் தேவை என்பதை அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர்.

அந்த விருப்பத்தினையும் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் தமிழ்க்கல்வி.மலேசியா (tamilkalvi.my) என்னும் இந்த இணையத்தளம் தொடங்கப்படுகிறது. மலேசியத் தமிழ்க்கல்விக்காக இந்தத் தளம் தொடங்கப்பட்டாலும், முதற்கட்டமாகப் பன்னாட்டுத் தமிழ்க்கல்வி மாநாடு தொடர்பான தகவல்களையும் செய்திகளையும் வழங்குவதற்கு இத்தளம் செயல்படும்.

பின்னர் படிப்படியாகத் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி, கலைத்திட்டம், கற்றல் பாடப்பொருள்கள், அறிவார்ந்த பகிர்வு, கருத்தாடல் எனத் தமிழ்க்கல்வி.மலேசியா இணையத்தளம் விரிவுபடுத்தப்படும். அதேவேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பான அனைத்துவித தகவல்கள், தரவுகள், ஆவணங்கள், விவரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு முழுமையான மூலகமாகத் தமிழ்க்கல்வி.மலேசியா இணையத்தளம் எதிர்காலத்தில் உருமாற வேண்டும்.

இந்தத் தளத்தை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் எனத் தகுந்த ஏடல்களையும் கருத்துகளையும் ஆசிரியர்கள், தமிழ்க் கல்வியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்கள், மாணவர்கள்,  ஆசிரியர் கல்விக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தவும் பயன்கொள்ளவும் வேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ்க்கல்வி.மலேசியா இணைத்தளம் நிறைவான சேவைகளை வழங்குவதை உறுதிபடுத்துவோம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!