Header Image

வாழ்த்துரை

pkamal
அனைவருக்கும் வணக்கம்!

வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

மலேசியாவில் 200 ஆண்டு காலத் தமிழ்க்கல்வி வரலாற்றினைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் உங்களை இந்த மடல் வழியாகச் சந்திப்பதில் மிகவும் மகிழ்கிறேன்.

உலக அளவில் தமிழ்க்கல்விக்கு எங்குமே இல்லாத ஒரு மாபெரும் அங்கீகாரத்தை நமது மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த 2016இல் 200 ஆண்டுகள் நிறைவை அடையும் மலேசியத் தமிழ்க்கல்வியைக் கொண்டாடி மகிழ்வதற்கு மாண்புமிகு பிரதமர் அவர்களே அறிவிப்புக் கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கான அனுமதியும் ஆதரவும் வழங்கி இருப்பது நம் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கிடைத்திருக்கும் பெருமையாகும்.

தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தை ஓராண்டு காலத்திற்கு நடத்துவதற்கு மலேசியக் கல்வி அமைச்சுக்கு இசைவு வழங்கியதோடு, அந்தக் கொண்டாட்டத்திற்கு எம்மைத் தலைமையேற்கச் செய்தமைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் பின் காலிட் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மலேசியாவில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்க்கல்வி வாழ்ந்து வருவதற்கு நம்முடைய முன்னோர், முன்னாள் தலைவர்கள், மூத்த தலைவர்கள், தொழிலாளர் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள் எனப் பல தரப்பினர் கரணியமாக இருந்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக வந்த நமது முன்னோர்கள் தமிழையும் தமிழ்க்கல்வியையும் கைநெகிழ்ந்து விட்டுவிடாமல் காலந்தோறும் பல போராட்டங்களுக்கு இடையிலும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

எந்தவொரு சூழ்நிலையும் தாய்மொழியையும் தமிழ்க்கல்வியையும் கட்டிக்காத்த நெஞ்சுரமும் தொலைநோக்குத் திறமும் கொண்ட நமது முன்னோர்களை நாம் என்றுமே மறந்துவிடக் கூடாது. அவர்களின் நேர்கொண்ட சிந்தனையாலும் நெறிகொண்ட செயற்பாட்டினாலும் இன்று நாம் தாய்மொழியோடும் தமிழ்க்கல்வியோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காக, நமது முன்னோர்களுக்குக் கரங்குவித்துத் தலைவணக்கம் செய்யவேண்டியது நம்முடைய கடமையாகும்.

1957இல் நமது மலேசியத் திருநாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் அரசங்கத்தின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியது. நமது அரசாங்கம் தேசிய நீரோட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளையும் இணைத்துக்கொண்டு மிகவும் சிறந்த முறையில் வழிநடத்தி வருகின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

தற்பொழுது நம் நாட்டில் 524 தமிழ்ப்பள்ளிகள் நன்முறையில் செயல்படுகின்றன. 82832 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் பயில்கிறார்கள். 149143 இந்திய மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்த மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க மொத்தம் 10001 தமிழாசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் பணியாற்றுகிறார்கள். மேலும், கல்வி அமைச்சின் அதிகாரிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், கல்விமான்கள், பேராசிரியர்கள், விரிவுரைஞர்கள் எனப் பல்லாயிரம் பேர் தமிழ்க்கல்வியை வழிநடத்தி வருகின்றார்கள்.

இப்படியாக, எல்லாருடைய கூட்டு உழைப்பினால் தமிழ்க்கல்வி இந்த நாட்டில் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்து வருகின்றது. இந்த வெற்றியில் மட்டும் நாம் மகிழ்ந்து வெறுமனே இருந்துவிட முடியாது. 21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று உலகத் தரத்திற்கு உயர்த்திட வேண்டும். தமிழ்க்கல்வியின் வழியாக நமது மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வாழ்வியல், சமயம் ஆகிய அனைத்தையும் பாதுகாத்துச் சிறப்பாக முன்னேற வேண்டும்.

அதற்கு நமக்கு முதலில் தேவைபடுவது கல்வி. அந்தக் கல்வியானது தாய்மொழி வழிக் கல்வியில் தொடங்கி வளர வேண்டும். இந்த உண்மையை உணர்ந்து தமிழ்க்கல்வியை முன்னெடுப்போம். தமிழ்க்கல்வி வழி முன்னேறுவோம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!

இக்கண்;

டத்தோ ப.கமலநாதன்
துணைக் கல்வியமைச்சர், மலேசியக் கல்வி அமைச்சு.