Header Image

அறிமுகம்

மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள்

education-logoமலேசியாவில் நமது மாணவர்களை உயர்ந்து விளங்கச் செய்வதில் தமிழ்ப்பள்ளிகளின் பங்கு மிகவும் அளப்பரியது. 2016ஆம் ஆண்டு நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்விக்கு 200 அகவை நிறைவடைகிறது.

கடந்த 200 ஆண்டுகளாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் அது உண்மையே.

மலேசியாவில் 200 ஆண்டுகள் நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்யும் உன்னத நோக்கத்தோடு மலேசியக் கல்வி அமைச்சு மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தை நடத்த முன்வந்திருக்கிறது.

இந்தக் கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பை நமது மாண்புக்குரிய பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களே அதிகாரப்படியாக அறிவித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். அதுமட்டுமல்லாது இந்தப் பெருவிழாவிற்கு மலேசியக் கல்வி அமைச்சு பொறுப்பேற்று இருப்பதும் துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள் தலைமையேற்று இருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி வரலாறு உண்டு.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு.

மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.

அந்த வகையில், 1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.

பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான் அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னைமொழியாம் தமிழ்மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 1816 அக்டோபர் 21ஆம் நாளன்று அன்றைய  Penang Free School  பள்ளியின் தலைவராக இருந்த சர் ஆர்.அட்சிங்ஸ் என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அன்று தொடங்கி இந்த 2016ஆம் ஆண்டு வரையில் நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 200 ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 524 பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்க்கல்வியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.

இந்தியா, தமிழ்நாடு, இலங்கை முதலான நாடுகளுக்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.

எனவே, இந்த 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசியக் கல்வி அமைச்சு சிறப்பாகச் சில திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நடத்தவுள்ளது.

நாடு முழுவதிலும் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வண்ணம் ஏறக்குறைய 13 செயற்திட்டங்களைச் செயல்படுத்த கல்வியமைச்சு இலக்கு கொண்டுள்ளது.

  1. தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டத்திற்கான இலச்சினை வரையும் போட்டி
  2. மலேசியாவில் தமிழ்க் கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்ட அறிமுக விழா
  3. தமிழ்க்கல்வி கட்டுரை எழுதும் போட்டி
  4. தமிழ் ஆசிரியர்களுக்கிடையிலான சொற்போர்
  5. பன்னாட்டுத் தமிழ்க்கல்வி மாநாடு
  6. தெற்கிழக்காசியாவுக்கான தமிழ் ஆராய்ச்சி மையம்
  7. தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான பாடல் திறன் போட்டி
  8. ஒரே மலேசியா தமிழ்மொழிப் போட்டி
  9. தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்டத்திற்கான சிறப்புப் பாடல்
  10. தமிழ்க்கல்வி 200 ஆண்டுப் பளிங்குவெட்டை அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலும் பொருத்துதல்
  11. தமிழ் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
  12. தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றை உள்ளடக்கிய புத்தகம்
  13. 200 ஆண்டுகால தமிழ்க்கல்வியை முன்னிட்டு மெதுவோட்டப் போட்டி

இப்படியாகப் பல்வேறு திட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் தலைமையிலான மலேசிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளைத் தொடந்து தக்க வைக்கவும் தரமான நிலையில் செயல்படுவதற்கும் நமது மலேசிய அரசாங்கம் முழு இசைவும் ஆதரவும் உதவியும் வழங்கி வருவதை யாரும் மறுத்துவிட முடியாது.

புதிதாக 6 தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கான அனுமதி அளித்துள்ளது, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகச் சிறப்புச் செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளது; தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் பெருவிழாவை நடத்துவதற்கு இசைவு அளித்துள்ளது; தமிழ்க்கல்விப் பளிங்குவெட்டில் தமிழ்மொழியிலேயே கையொப்பம் இட்டுள்ளது போன்ற நமது மாண்புமிகு பிரதமர் அவர்களின் நடவடிக்கைகள் தமிழ்ப்பள்ளிகளின் இருப்பையும் வளர்ச்சியையும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு என்றால் மிகையாகாது. பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலர் இன்று முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள் பங்காற்றியுள்ளன.  அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே இருக்கின்றது.

1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழவும் இந்த 200 ஆண்டுகள் கொண்டாட்டம் வழிவகுக்கும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்படும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்படும்; தமிழ்க்கல்வியும் தமிழ்ப்பள்ளிகளும் உலகத் தரத்திற்குச் சிறந்தோங்கும் என்பவையே எல்லாருடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!

எழுத்தாக்கம்:- சுப.நற்குணன்